தெலுங்கு பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கம் மற்றும் சன்னி தியோல் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான பாலிவுட் திரைப்படம் ‘ஜாட்’. இப்படம் இலங்கை தமிழர் விடுதலை போராட்டை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று(ஏப்ரல்.14) கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், இலங்கை தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி யாழ்ப்பாணப் புலிப்படை என்று உள்நோக்கத்துடன் பெயர்வைத்து இலங்கை தமிழர் விடுதலைப்போராட்டம் தவறானது போலவும், அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
முழுக்க முழுக்க தமிழர்கள் மீதான இனவெறுப்பினாலேயே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதை எளிதில் உணர முடிகிறது. தாயகக்கனவுடன் சாவினைத் தழுவி, உலகத்தமிழர்களின் உள்ளத்தில் வைத்து வணங்கப்பெறுகின்ற எம்மாவீரத் தெய்வங்களை அவமதிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே, ஜாட் திரைப்படக் குழு, இலங்கை தமிழர் விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு கடந்த காலங்களைப்போல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜாட் திரைப்படத்தை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தும்” என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜாட் திரைப்படத்தை தடை செய்யக் கோரி மதுரை சொக்கிக்குளம் பகுதியில் உள்ள தனியார் மால் முன்பு 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் இன்று(ஏப்ரல்.15) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் கோஷமிட்டபடி தனியார் மால் உள்ளே சென்ற முயன்றபோது பேரிகேட் அமைத்து தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் – போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் போராட்டக்காரர்கள் கையில் ஏந்தி கொண்டு வந்த பதாகைகளில் “இந்த திரைப்படம் திரையிடப்படமாட்டாது” என்ற வாசகம் அடங்கிய நோட்டீசை மால் முன்பாக ஒட்டி படத்தை தடை செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து காவதுறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Leave a Reply