இந்து – இஸ்லாமியர் இடையே கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு…

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

“திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்புக்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை நிலவியது. அச்சமயத்தில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திருப்பரங்குன்றம் மலையில் 33 சென்ட் நிலங்களை தவிர மீதமுள்ள இடமானது முருகனுக்குதான் சொந்தம் என்றும், இந்த மொத்த மலையும் முருகன் மலை என்றும் சொல்வதன் மூலம் இந்து, இஸ்லாமிய மக்கள் மத்தியில் பகைமையையும், கலவரத்தையும் தூண்டியுள்ளார்.

அரசு பதவியில் இருந்து கொண்டு ஒரு மதத்திற்கு எதிராக பகைமை ஏற்படுத்த வேண்டும் என உள்நோக்கத்தோடு செயல்பட்டு உள்ளார். இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் இந்து இஸ்லாமியர்களுக்கு இடையே மீண்டும் பிரச்னை வரும் சூழல் உருவானது. அமைச்சராக பதவி ஏற்க்கும் போது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கமாட்டேன் என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்பட்டுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் பேச்சு தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் வழக்குப்பதிவு செய்யவில்லை. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு தீர்ப்புகளுக்கு முரணாகவும், மதநல்லிணக்கத்திற்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மீது இரு மதபிரிவினருக்கும் இடையில் கலவரத்தை தூண்டுதல், பகமை உணர்வை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *