வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா :-
இந்த சட்ட திருத்தத்தின் சில சரத்துக்களை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது. ஏனெனில் வக்ஃபு விவகாரத்தில் லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன. குறிப்பாக சில கிராமங்கள் கூட வக்ஃபு நிலம் என எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவரும் பாதிக்கப்படக்கூடாது என்றே இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரத்தில் விரிவான எழுத்துப்பூர்வ பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்கிறேன். எனவே இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக்கூடாது.
தலைமை நீதிபதி :-
இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவும் இப்போது பிறப்பிக்கவில்லை. அதேவேளையில் இடைக்கால நிவாரணமாக, சம்மந்தப்பட்ட தரப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதால் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவுள்ளோம். எனவே தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவை பிறப்பிக்கலாம் என்று இருக்கிறோம்.
குறிப்பாக நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனத்தில் அனைத்தும் தற்போதைய நிலையில் தொடர வேண்டும் என்றே விரும்புகிறோம்.
சொலிசிட்டர் :-
இந்த விவகாரத்தில் என்னுடைய தரப்பு விளக்கத்தை தரும் வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம். ஏனெனில் எந்த நியமனமும் செய்யப்படாது, நிலம் வகைப்படுத்தப்படாது என உத்தரவாதம் அளிக்கிறேன்.
தலைமை நீதிபதி உத்தரவு :-
புதிய சட்டப்படி, எந்த உறுப்பினர் நியமனனும் இருக்கக்கூடாது. ஏற்கனவே வக்ஃபு என பதியப்பட்ட, வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. புதிய சட்டப்படி நில வகைப்படுத்தலும் இருக்கக்கூடாது. மத்திய தரப்பு விளக்கத்தை தரும் வரை ஒரு வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உத்தரவாதம் அளித்ததை ஏற்று மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளோம்.
வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 100 முதல் 120 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் விசாரிப்பது கடினம். எனவே 5 அல்லது 6 பிரதான மனுக்களையும் ,முக்கிய சட்ட கேள்விகளை எழுப்பும் மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறோம். என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், வக்ஃபு வாரியம், 7 நாட்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.
Leave a Reply