தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது” – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு, அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அதில், “திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் மற்றும்
அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்’ என்ற பெயரில் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க கோயில் உள்ளது. இந்த பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கே அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் பொதுமக்கள், பக்தர்கள் என பலரும் வந்து குளித்து செல்கின்றனர்.

மேலும் இந்த பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த நுழைவு கட்டணம் உள்ளூர் மக்களிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தமிழ்நாடு
வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக பணம்
வசூலிக்கப்படுகிறது. அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பணம் வசூல் செய்வது பேரூராட்சி, நகராட்சி அல்லது பஞ்சாயத்து ஆகியோர் மட்டுமே செய்ய வேண்டும்.

ஆனால், வனத்துறை அலுவலர்கள் இணைந்து பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும் நுழைவு கட்டணம் என்பது உள்ளூர் பொதுமக்களிடமும் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அகஸ்தியர் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கும், உள்ளூர் பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய
அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உள்ளூர் மக்களுக்கு கட்டணம்
வசூலிக்க கூடாது என உத்தரவிட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top