சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்ததுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பாமக சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சௌமியா அன்புமணி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், பாஜக மகளிரணி சார்பில் மதுரை முதல் சென்னை வரை நீதி கேட்டு பேரணி நடத்த அறிவிக்கப்பட்டது. மதுரை சிம்மக்கல் கண்ணகி சிலையிலிருந்து தொடங்கிய இந்த பேரணியை பாஜக மகளிரணி மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில் குஷ்பு துவக்கி வைத்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காவல்துறையின் தடை உத்தரவுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, உமாரதி மற்றும் பல பாஜகவினர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “பாஜக உண்மையை பேசுவதால், திமுக அரசு பயந்து போராட்ட அனுமதி மறுக்கிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்,” என கூறினார்.
Leave a Reply