ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் ஆளுநர் ரவியின் இந்த செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் என பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், நமது மாநில ஆளுநரோ தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார்.

இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறி ஆக்கினார். மாநிலத் தன்னாட்சி உரிமையை அவமதிப்பதாகவும் இச்செயல் இருந்தது. இதோ இப்போது மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம், ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துள்ளது. மாநில உரிமை காக்கும், மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை தமிழக வெற்றிக் கழகம் மனதார வரவேற்கிறது.

தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று. மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு. இதை நம் கழக வெற்றித் தலைவரின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *