தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பழைய ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் மணி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஷ் (20) கல்லூரி படித்து வந்த நிலையில், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் ஹரிஷ் நேற்று வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பருடன் கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு நண்பரின் கையில் ஏறி உள்ளது. அப்போது நண்பர் தட்டி விடவே பின்னால் அமர்ந்திருந்த ஹரிஷ் கையில் பாம்பு கடித்துள்ளது. சுதாரித்துக் கொண்ட ஹரிஷ் கம்பம் அரசு மருத்துவமனை வந்து சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.
மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல
வேண்டுமென்று மருத்துவர்கள் கூறவே, அதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹரிஷ் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஹரிஷின் உடலை உடற்கூறு ஆய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இது தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply