
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதையடுத்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறித்தது.
இத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் புறக்கணித்தன. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் களத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று(ஜன.24) தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். இரு கட்சிகளும் தொடர்ந்து மக்களிடையே வாக்கு சேகரித்து வருகின்றன.
இந்த நிலையில், சீமான் தனது கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து இன்று மாட்டு சிலை மரப்பாலம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இல்லத்திற்கு சென்று அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்து, ஈவிகேஸ் இளங்கோவனின் வீட்டை பூட்டி வைத்தனர்.

தொடர்ந்து ஈவிகேஸ் இளங்கோவனின் வீட்டருகே சீமான் பிரச்சாரம் மேற்கொண்டபோது, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிழவியது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அப்பகுதியில் கூடியிருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Leave a Reply