தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

February 4, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

February 4, 2026

தமிழ் செய்தி இணையதளம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாதக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், இத்தொகுதி காலியாகி, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. 2,26,433 வாக்காளர்களுடன், 237 வாக்குச்சாவடிகள் கொண்ட இந்த தொகுதிக்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

வேட்புமனுக்கள் தாக்கல் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி, நேற்று (ஜன. 17) நிறைவடைந்தது. கடைசி நாளில், திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தமாக 66 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

இன்று (ஜன. 18) வேட்புமனுக்களின் பரிசீலனை நடைபெற்று, திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் மனு மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

 

வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாள் ஜனவரி 20ஆகும். அதே நாளின் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும், மேலும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top