“உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும்”
திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் இன்று அதிகாலை தொடங்கி, அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில், மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் கண்ணேட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடையதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
துரைமுருகன்-ஸ்டாலின் சந்திப்பு
சோதனை நடந்து கொண்டிருந்தபோது, சென்னை கோட்டூர்புரம் வீட்டிற்கு துரைமுருகனின் வழக்கறிஞர்கள் இருவர் வருகை தந்து, அவருடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் துரைமுருகன், தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன்,
“உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும்”இந்த சோதனை தொடர்பாக எனக்கு முழுமையான தகவல்கள் இல்லை. யார் வந்திருக்கிறார்கள், என்ன வழக்கு என்பது தொடர்பாக தெரியவில்லை. பின்னர் தகவல் கிடைத்தால் கருத்து தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு
அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள துரைமுருகனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.