செஸ் வீரர்களுக்கான தரவரிசையில் உலகின் நம்பர்-1 வீரராக உள்ள மேக்னஸ் கார்ல்சென் தனது தோழி ‘எல்லா விக்டோரியா மெலோனை(26)’ மணமுடித்துக் கொண்டார். இவர்களது திருமண நிகழ்ச்சி ஓஸ்லோவில் உள்ள ஹோல்மென்கொல்லென் சேப்பல் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை தந்து புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.
நார்வே நாட்டைச் சேர்ந்த 34 வயதான மேக்னஸ் கார்ல்சென் உலக செஸ் சம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவராவார். அண்மையில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று டை ஆனதைத் தொடர்ந்து, ரஷிய கிராண்ட்மாஸ்டர் இயான் நெபோம்நியாச்ட்ச்சியுடன் இணைந்து இருவரும் சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில், புத்தாண்டின் தொடக்கத்தில் மண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார் கார்ல்சென். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.