மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த பெ.சண்முகம் ? விரிவாக பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் பெ.சண்முகம். மாணவர் பருவம் முதல் இடதுசாரி அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், தேசிய நிர்வாகியாகவும் செயல்பட்டார்.
தருமபுரி வாச்சாத்தியில் பழங்குடி மக்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெ.சண்முகம். கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்ட அவர் சிபிஎம்-ன் விவசாய சங்க மாநில செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைவாழ் மக்கள் பிரிவு தலைவராக செயல்பட்ட அவர் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தி தண்டனை பெற்று தந்தார். பெ.சண்முகத்தின் சமூகப் பணிகளை பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தது.
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை வழக்கமாக கொண்ட அவரிடம், ஒரு வழக்கில் ஆஜராவதற்கு நாமக்கல் நீதிமன்றம் சென்றபோது துண்டை எடுத்து விட கூறினர். இடுப்பில் இருந்த துண்டு தோளில் ஏறியதற்கு மூதாதையர்களின் போராட்டமும், உயிர்த் தியாகமும்தான் காரணம் எனத் தெரிவித்த அவர், நீதிபதியே சொல்லி இருந்தாலும் நான் தோளிலிருந்து துண்டை அகற்றமாட்டேன் என உறுதியோடு தெரிவித்தார்.
கட்சியில் ஆரம்ப காலத்திலேயே இணைந்து, பணியாற்றி பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிபிஐ(எம்) புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply