“தமிழ்நாட்டை திமுகதான் என்றும் ஆளும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! இரண்டு நாள் அரசு பயணமாக சிவகங்கை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான இன்று சிவகங்கையில் பல்வேறு நலத்திட்ட உதவி பணிகளை தொடங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
“வீரமும், புகழும் கொண்ட மாவட்டம் சிவகங்கை. சிவகங்கையின் ஒவ்வொரு குடும்பத்திலும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அப்பாவாக இந்த ஸ்டாலின் இருந்து வருகிறேன். 31 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, காளையார் கோவிலில் ரூ.616 கோடி மதிப்பிலான காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் ரூ. 50 கோடி செலவில் புதிய புறவழி சாலை அமைக்கப்படும். காரைக்குடி நகராட்சிக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும். மத்திய அரசின் ஓரவஞ்சனையை மீறி தான் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறோம்.
பதவிக்காக மட்டும் டெல்லிக்கு சென்றவர்கள் அதிமுகவினர். மற்றொரு கட்சியின் தேர்தல் அறிக்கையை நகலெடுத்து தங்கள் கட்சி தேர்தல் அறிக்கை போல் பழனிசாமி வெளியிட்டவர். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் பழனிசாமி வயிற்று எரிச்சலில் இருக்கிறார். நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவரால் நிரூபிக்க முடியுமா?
10 ஆண்டு காலம் ஆட்சி செய்து மக்களை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டனர். சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் இதுவரை 389- ஐ நிறைவேற்றியுள்ளோம். 10 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து, பல வெற்று வாக்குறுதிகளை கொடுத்து விட்டு எதையாவது நிறைவேற்றினார்களா?
மத்திய அரசு திட்டங்களையும் மாநில அரசின் நிதியைக் கொண்டு செயல்படுத்தி வருகிறோம். எந்த செலவு செய்தால் மக்கள் பலனடைவார்கள் என்று எங்களுக்கு தெரியும். எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். உதய சூரியன் தான் என்றென்றும் தமிழகத்தை ஆட்சி செய்யும்” என பேசியுள்ளார்.