ஹைதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தில் ராஜுவின் உறவினர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வேலம்குச்சா வெங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு, தெலுங்கு திரையுலகில் முக்கிய திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக செயலில் உள்ளார். அவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக அவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் தயாரித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ ஆகிய இரு படங்களும் இம்மாதம் திரையரங்குகளில் வெளியான பின்னர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தையும் தில் ராஜு தயாரித்திருந்தார்.