நாவடக்கம் அற்றவராக அண்ணாமலை அம்பலப்படுகிறார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

முதலமைச்ச மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் குறித்து சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு சொல்வதை செய்யும் அரசு, சொல்வதற்கு மேலாகவும் மக்கள் சேவை செய்யும் அரசு. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தெரிவித்ததைப்போல், “நான் ஓட்டு போட்டவருக்கு மட்டும் முதலமைச்சரல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் நானே முதலமைச்சர்”. அந்த வகையில் நாம் ஏன் திமுக அரசுக்கு ஓட்டுப் போட தவறிவிட்டோம் என்று சிந்திக்கின்ற வகையில் இந்த ஆட்சி அமையும் என்று சூளுரைத்தார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை 90% -க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவற்றில் சில, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞரின் கனவு இல்லத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம்,  இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும்-48, மக்களுடன் முதல்வர், தொழில்துறை 4.0 திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இல்லம் தேடி கல்வி, இப்படி நூற்றுக்கணக்கான சிறப்புத் திட்டங்களை வரிசைப்படுத்தி கொண்டே போகும் அளவிற்கு தமிழ்நாடு மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி.

அதனால்தான் அண்மையில் ‘இந்தியா டுடே’ மற்றும் ‘சி ஓட்டர்ஸ்’ அமைப்பினர் நடத்தியக் கருத்துக்கணிப்பில் கடந்தாண்டு திமுக-விற்கு இருந்த மக்கள் செல்வாக்கு 47 சதவிகித்திலிருந்து 52 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகவும், இப்போது மட்டுமல்ல, எப்போது தேர்தல் நடைபெற்றாலும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், திமுக அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருந்தது.

இதேபோல Most Popular CM in Home State எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 36 சதவிகிதமாக இருந்த மக்கள் செல்வாக்கு, இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் 57 சதவிகிதமாக உயர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் இடம்பெற்றிருப்பது விஞ்ஞானப்பூர்வமாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத  அண்ணாமலை  தொடர்ந்து முதலமைச்சர் பற்றியும் துணை முதலமைச்சர் பற்றியும் ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சமாகும். நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என அனைத்திலும், தமிழ்நாட்டு மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவின்றி போய்கொண்டிருக்கிறது.

திடீரென்று செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லி Shoe கால்களுடன் வலம் வருவது, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் கண்டு நாடே எள்ளி நகையாடுகிறது. கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திமுக-வை பற்றியும்,  முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றியும் பேசுவதற்கு எந்தவிதமான தகுதி இல்லை.

துணை முதலமைச்சர்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் போன்றவர்களை தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் பேசும்  அண்ணாமலை கண்ணாடி முன்நின்றால் தன்னுடைய தவறுகள் ஒவ்வொன்றாய் வரிசைக்கட்டி நிற்கும். நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை இடைவெளியில்லாமல் தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கிற அண்ணாமலை ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம்”

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *