காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக வெற்றில் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினார்.
மேலும், பரந்தூர் கிராம மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்தார். அதற்காக, தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தவெக தலைவர் விஜய் இன்று (ஜன.20) பரந்தூர் கிராம மக்களை சந்திக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தவெக தலைவர் விஜய் எங்கு மக்களை சந்திக்க உள்ளார்? என்பது தொடர்பாக குழப்பம் நிலவியது. தனியார் திருமண மண்டபத்தில் மக்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்டது. அதே நேரத்தில், ஏகனாபுரம் கிராமத்தில் அம்பேத்கர் திடலில் வேனில் நின்றபடி விஜய் பொதுமக்களிடம் பேச உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலே விஜய், மக்களை சந்தித்து பேச காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் விஜய் மக்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.