“பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு பெரியாரை பற்றி பேசி வருகிறார்” – சீமானை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;

“திமுகவை அழித்து விடுவோம் என்று சிலர் கூறுகின்றனர். திமுகவை அழிக்க
நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்த போது எடப்பாடி பழனிசாமி மெரினாவில்
இடம் கொடுக்க மறுத்துவிட்டார். அன்றைக்கு திமுகவினர் கண்ணீர் விட்டனர்.
அதனால்தான் அதிமுக இன்று உடைந்து விட்டது. நீதிமன்றத்தின் மூலமாக போராடி பெற்றோம்.

பெண்களுக்கு செய்தால் நன்றி மறக்க மாட்டார்கள் என்பதால்தான் திமுக ஆட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு 8 முறை மோடி வந்தார். கவனம் செலுத்தினார். ஆனால் திமுக கூட்டணி- 40/40க்கு வெற்றி பெற்றது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் காரணமாக அதிக அளவு பெண்கள் வாக்குகளைப் பெற்றோம். இதைப்
பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி புலம்புகிறார்.

திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்து
சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று கூற முடியுமா அவர்களால்? ஜெயலலிதாவின் வீட்டை கூட பாதுகாக்க முடியவில்லை.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிவகாசி ஜெயலட்சுமி சம்பவம் நடைபெற்றது. அது போன்று திமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு காரணம் ஆளுநர்தான். அவரால் தான் அங்கு பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. பெண்களை பாதுகாக்க இந்தியாவே பாராட்டும் அளவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளார்.

திமுகவை பாராட்ட மனம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி திட்டுகிறார். திமுகவை எதிர்க்க இன்று ஆள் இல்லை. நாம் தமிழர் கட்சியை நடத்தும் உரிமை சீமானுக்கு கிடையாது. அந்தக் கட்சியை தொடங்கிய சி.பா. ஆதித்தனார் 1967ல் திமுக கூட்டணிக்கு வந்தார். அண்ணா அவருக்கு சபாநாயகர் பதவி தந்தார். அண்ணா மறைவிற்குப் பின்னர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றதும் திமுகவில் இணைந்து அமைச்சராகிவிட்டார்.

கட்சி தொடங்கியவர் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த பிறகு அப்புறம் ஏது கட்சி?. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் இன்றைக்கு நான் தான் வாரிசு என்று சீமான் மோசடியாக கட்சியை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூட்டத்தில் நான் சீமானுக்கு சவால் விட்டேன். முதலமைச்சர், துணை முதலமைச்சர் கேட்கட்டும் பதில் கூறுகிறேன் என்கிறார். அவர்கள் சீமானுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை மோசடி செய்து பயன்படுத்தி வருகிறார். ராஜ்குமார் என்பவர் இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார். பிரபாகரன் படத்தை வைத்து நல்ல வியாபாரம் செய்தார்.
விடுதலை புலிகளின் தலைவர் 1980ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கைது
செய்யப்பட்டார். அதை கேள்விபட்ட கருணாநிதி ஜாமினில் எடுக்க அறிவுறுத்தினார். பிரபாகரனுக்கு ஜாமின் பெற்றுக் கொடுத்தேன். நீதிமன்றத்தில் ஆவணங்கள் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளட்டும். 48 விடுதலை புலிகளை ஜாமினில் எடுத்த கட்சி திமுக.

அன்றைக்கு எங்கு இருந்தால் சீமான். சீமான் யார் என்பதை புரிந்து கொண்டார்கள். வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. இதனால் சீமான் பாஜகவுடன் இணைந்து கொண்டு அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, பெரியாரைப் பற்றி பேசி வருகிறார். சீமான் பெரியாரை திட்டியதும் அண்ணாமலை மாலை போடுகிறார். எச் ராஜா, தமிழிசை வாழ்த்துகின்றனர்.

பாஜகவினால் பெரியாரை ஒழிக்க முடியவில்லை. நூறு வருடமாக பெரியாரை ஒழிக்க முயற்சி செய்தனர். சூனியம் வைத்து சாகடிக்க பார்த்தனர். பெண்களுக்கான உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை வாங்கிக் கொடுத்தவர்
பெரியார். தாழ்த்தப்பட்டவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக வர வேண்டும் என்பதற்கு
காரணமாக இருந்தவர் பெரியார்.

திமுகவை அழிக்க பலரும் புறப்பட்டு வந்துள்ளனர். திமுகவினர் ஒற்றுமையாக
இருந்து செயல்பட வேண்டும். எதை வேண்டுமானாலும் மத்திய அரசு செய்யும். ஆனால் அத்தனையும் சந்திக்கக்கூடிய ஆற்றல் நம்மை வழிநடத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.  அதை அவர் பார்த்துக் கொள்வார்” என தெரிவித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *