தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

March 26, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

March 26, 2026

தமிழ் செய்தி இணையதளம்

பாதுகாப்பினை அளிக்கும் காவல் நிலையமே பாதுகாப்பற்ற நிலையில் – #OPS கண்டனம்!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மற்றும் ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“பொதுமக்களுக்கும், பொதுமக்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பினை வழங்கி நாட்டை அமைதிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல் துறைக்கு உண்டு. ஆனால், கடந்த 44 மாத கால திமுக ஆட்சியில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது. சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டிய காவல் துறை செயலிழந்து இருப்பது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும்.

காவல் துறை சார் ஆய்வாளர், காவலர், சிறை காப்பாளர், தீயணைப்புத் துறை வீரர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றதாகவும், அந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் நடைபெற்ற முறைகேடுகளை, காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுட்டிக்காட்டியதாகவும், இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய அறையில் தீப்பிடித்ததாகவும், இந்தத் தீவிபத்து தன்னை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுகுறித்து இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

காவல் துறையில் உயர் நிலையிலுள்ள பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, அவரை காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளிக்க வேண்டிய அலங்கோல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பினை அளிக்கும் காவல் நிலையமே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்றால், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையும், குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தருவதில் தாமதம் ஏற்படும் நிலையும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆட்சியாளர்களிடமிருந்தும், திமுகவினரிடமிருந்தும் காவல் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதே இதற்குக் காரணம்.

தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெறும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல்கள், அதிகாரிகள் மிரட்டப்படுதல் ஆகியவற்றைப் பார்க்கும்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
“காய்ந்து போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ந்து போயிட்டால் …” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப, பொதுமக்கள் எல்லாம் காவல் துறையைப் பார்த்து ஆறுதல் அடைந்த நிலையில், அந்த காவல் துறையே கண்கலங்கி நிற்கிற அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலை நீடித்தால், தமிழ்நாடு வன்முறைக் காடாக மாறிவிடும் என எச்சரிக்கிறேன். இதனைத் தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு முன்னாள் முதலமச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top