மஹாகவி பாரதியார் தனது கவிதைகளில், “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று தீவிரமாகப் பாடினார். பெண் என்பவள் நம் நாட்டின் கண்கள்; தமிழ்நாடு, தமிழ்த்தாய் என்று நாம் போற்றுகிறோம். பெண்ணை தெய்வமாக ஆராதிக்கிறோம்.
பெண் தன்னுடைய குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமளவில் பங்களிக்கிறார். இரத்தமும் சதையுமாக ஒரு புதிய உயிரை உருவாக்கும் சக்தியுடன் அவர் வாழ்கிறார். பல கால கட்டுப்பாடுகளையும் சவால்களையும் எதிர்கொண்டு, இன்றைய 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் கல்வியிலும், தொழிலிலும், அரசியலிலும், கலை, விளையாட்டு, தொழில்முனைவில் தலைநிமிர்ந்து முன்னேறி வருகிறார்கள்.
ஆனால், சமீபத்தில் தமிழ்நாட்டில் பெண்களை மையமாகக் கொண்ட சில கொடூர நிகழ்வுகள் அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்துகின்றன. பெண் என்பது ஒரு பொருளாக அல்ல, மனிதராக மதிக்கப்பட வேண்டும். சகோதரியாக, தாயாக, பாட்டியாக நம்முடன் வாழும் பெண்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
நாம் நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் நாம், பெண்களை அன்பும் மரியாதையும் கொடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பை, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வழங்க வேண்டும்.
பெண்களை மதித்து, அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வோம்.
-ஓ. சரஸ்வதி B.A