மதுரையில் பட்டியலின சிறுவனை சித்திரவதை – உடனடி நடவடிக்கை எடுக்க சிபிஐஎம் வலியுறுத்தல்
மதுரை அருகே பட்டியலின சிறுவனை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிசேஷன் (17) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவில் நடனம் ஆடியதாகவும், அதன் பின்னர் சாதி மோதலின் பேரில் சித்திரவதை செய்யபட்டதாகவும் புகார் கூறியுள்ளார்.
கொடூர சம்பவம்:
16-01-2025 அன்று வேலைக்காக உசிலம்பட்டி சென்ற ஆதிசேஷனை, சங்கம்பட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று முத்தையா கோயில் கண்மாய்கரையில் வைத்து தாக்கியதோடு, சிறுநீர் கழித்து அவமானப்படுத்தினர். மேலும், 6 வயது சிறுவனின் காலில் விழவைத்து தவழச் செய்தும் சாதிய வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார்:
ஆதிசேஷன் 17-01-2025 அன்று தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் 256(b), 351(2) மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 3(1)(r), 3(1)(s) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மணிமுத்து, நித்திஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஐஎம் வலியுறுத்தல்:
இந்த கொடூரச் செயலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டனம் வெளியிட்டுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் மற்றும் முழுமையான பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
சாதி அடிப்படையிலான வன்முறைகள் தொடர்வதை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தலும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.