மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃபு சட்டத்திருத்த மசோதா!

இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும், அசையா சொத்துகள் மற்றும் நன்கொடைகளை வக்ஃபு என்பார்கள். இந்த வக்ஃபு சொத்துக்கள் நிர்வாகம் செய்வதற்கு  1954 ஆம் ஆண்டு வக்ஃபு  வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த 1995, 2013 ம் ஆண்டுகளில் வஃக்பு  சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவர மக்களவையில் இதற்கான மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணியை சேர்ந்த 16 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர்.  கூட்டுக்குழு சார்பில் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று, ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன.

தொடர்ந்து கூட்டுக் குழுவினர் கடந்த ஜனவரியில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், வக்ஃபு  வாரிய சட்டத்தில் 44 திருத்தங்கள் செய்யப்பட்ட  655 பக்க அறிக்கையை  சமர்ப்பித்தது. இந்த அறிக்கை கடந்த பிப்வரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் (ஏப்.2) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் சுமார் 12 மணி நேரம் நடைபெற்றதாக தெரிகிறது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணியளவில் அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மதியம் 1 மணியளவில் இந்த மசோதா மீதான விவாதம் தொடங்கியது.
பின்னர் விவாதம் நிறைவடைந்ததை அடுத்து நள்ளிரவு 1.45 மணியளவில் மசோதாக மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள், வைகோ ஆகியோர் வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்க வரவில்லை. மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

தொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதையடுத்து, இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் வக்ஃபு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்ததும், அது வக்பு வாரிய சட்டமாக அமலுக்கு வரும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *