தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

முதல் கோப்பை வென்றது பெங்களூரு அணி கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற பஞ்சாப் அணி, இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.

ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று நடந்த 18வது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் பெங்களூரு, பஞ்சாப் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

பெங்களூரு அணிக்கு துவக்கத்தில் பில் சால்ட் (16) ஏமாற்றினார். பின் கோலி, மயங்க் அகர்வால் விவேகமாக விளையாடினர். அர்ஷ்தீப் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் அகர்வால். மறுபக்கம் ஜேமிசன் பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். ‘பவர் பிளே’ (முதல் 6 ஓவர்) முடிவில் பெங்களூரு 55/1 ரன் எடுத்தது. 7வது ஓவரை வீசிய சகால் ‘சுழலில்’ அகர்வால் (24) சிக்கினார். பின் சகால் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார் கேப்டன் ரஜத் படிதர். உடனே சுதாரித்த கேப்டன் ஷ்ரேயஸ் துடிப்பாக வியூகம் வகுத்தார். ‘வேகப்புயல்’ ஜேமிசனை மீண்டும் அழைத்தார். இவரது ஓவரின் (11வது) 3வது பந்தில் சிக்சர் அடித்த படிதர் (26), 5வது பந்தில் எல்.பி.டபிள்யு., ஆனார்.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் அனுபவ கோலி துாணாக நின்று விளையாடினார். இந்த நேரத்தில் ஓமர்சாய் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது பந்தில் ‘புல் ஷாட்’ அடிக்க பார்த்தார் கோலி. ஆனால் ‘டாப்-எட்ஜ்’ ஆகி பந்து மேலே பறக்க, ஓமர்சாய் அற்புதமாக பிடிக்க, கோலி (35 பந்தில் 43 ரன், 3×4, ஸ்டிரைக் ரேட் 122.85) பெவிலியின் திரும்பினார்.

அர்ஷ்தீப் 3 விக்.,

கடைசி கட்டத்தில் ‘பினிஷர்’ ஜிதேஷ் சர்மா கைகொடுத்தார். அர்ஷ்தீப் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். ஜேமிசன் ஓவரில்(17வது) ஜிதேஷ் 2 சிக்சர், லிவிங்ஸ்டன் ஒரு சிக்சர் அடித்தனர். 5வது பந்தில் லிவிங்ஸ்டனை (25) அவுட்டாக்கிய போதும் 23 ரன் வழங்கினார். வைஷாக் பந்தில் ஜிதேஷ் (24, 2×4, 2×6) போல்டானார். ஓமர்சாய் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த ஷெப்பர்டு நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரை அர்ஷ்தீப் கலக்கலாக வீசினார். ஷெப்பர்டு (17), குர்ணால் பாண்ட்யா(4), புவனேஷ்வர் (1) என 3 விக்கெட் வீழ்த்தி, 3 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 190/9 ரன் எடுத்தது.

பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப், ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

குர்ணால் திருப்பம்

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பியான்ஷ் ஆர்யா (24) நிலைக்கவில்லை. 8 ஓவரில் 70/1 ரன் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. இதற்கு பின் குர்ணால் பாண்ட்யா திருப்பம் ஏற்படுத்தினார். இவரது சுழலில் பிரப்சிம்ரன் (26) சிக்கினார். ஷெப்பர்டு பந்தில் கேப்டன் ஷ்ரேயஸ் (1) நடையைகட்ட, சிக்கல் ஆரம்பமானது. குர்ணால் பந்தில் இங்லிஸ் (39) வீழ்ந்தார். புவனேஷ்வர் ஓவரில்(17), ஓமர்சாய்(1), ஸ்டாய்னிஸ் (6) அவுட்டாக, வெற்றி உறுதியானது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 184/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. 6 ரன்னில் வென்ற பெங்களூரு அணி, முதல் கோப்பையை கைப்பற்றியது.

‘சுழலில்’ அசத்திய குர்ணால் பாண்ட்யா, புவனேஷ்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

’18’ ராசி

பிரிமியர் அரங்கில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 18 ஆண்டுகளாக விளையாடுகிறார் கோலி. இவரது ஜெர்சி நம்பர் 18. தற்போதைய 18வது தொடரின் ராசி கைகொடுக்க, கோப்பையை கைப்பற்றினார். ‘ஈ சாலா கப் நம்தே’ (இந்த ஆண்டு கோப்பை நமதே) என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவானது. கோப்பை வென்றதும் ஆனந்த கண்ணீரில் மிதந்தார் கோலி. பைனலை காண நேற்று ஆமதாபாத் வந்த பெங்களூரு அணியின் முன்னாள் வீரர்கள் டிவிலியர்ஸ், கெய்ல் உடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

குழந்தை போல துாங்குவேன்…

கோலி கூறுகையில்,”எனது இளமை காலத்தில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டும் விளையாடுகிறேன். எனது இதயம், ஆன்மா என எல்லாம் பெங்களூரு அணியுடன் உள்ளது. பெரிய தொடர்களில் வெல்ல விரும்புவேன். பிரிமியர் கோப்பை மட்டும் ‘மிஸ்’ ஆகிக் கொண்டே இருந்தது. 18வது ஆண்டில் கோப்பை கிடைத்துள்ளது. இந்த நிம்மதியில், ஒரு குழந்தையை போல துாங்குவேன்,”என்றார்.

6 ரன்னில்…

கடந்த முறை கோல்கட்டா அணிக்கு கோப்பை வென்று தந்தார் கேப்டன் ஷ்ரேயஸ். இம்முறை பஞ்சாப் அணியை பைனலுக்கு அழைத்து வந்தார். நேற்று வெறும் 6 ரன்னில் தோற்றதால், பஞ்சாப் அணிக்கு கோப்பை வென்று தரும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.

அர்ஷ்தீப் 21 விக்கெட்

பிரிமியர் தொடரின் ஒரு சீசினில் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் அர்ஷ்தீப் (21 விக்., 2025) 4வது இடம் பிடித்தார். முதல் 3 இடங்களில் ஆண்ட்ரூ டை (24, 2018), ஹர்ஷல் படேல் (24, 2024), ரபாடா (23, 2022) உள்ளனர்.

கோலி முதலிடம்

பிரிமியர் அரங்கில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரரானார் பெங்களூருவின் கோலி (1159 ரன், எதிர் பஞ்சாப்). இவர் தனது முந்தைய சாதனையை (1146 ரன், எதிர் சென்னை) தகர்த்தார்.

‘சல்யூட்’

பிரிமியர் தொடரின் பைனலுக்கு முன் நடந்த நிறைவு விழாவில் ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை கவுரவிக்கும் வகையில் பாடல்கள் பாடப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top