தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 23, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 23, 2025

தமிழ் செய்தி இணையதளம்

100 தீவிரவாதிகள், 40 பாக். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! முப்படை அதிகாரிகள் விளக்கம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

அப்போது பேசிய விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, விமானப்படைத் தளங்களில் தாக்குதல் நடத்தினோம். 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட அனைத்து வகையான தாக்குதல்களும் இந்தியாவால் முறியடிக்கப்பட்டன.

ட்ரோன் தாக்குதலின் போது பாகிஸ்தான் விமானங்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு பயணிகளின் விமானங்களையும் பறக்கவிட்டது. இதனால் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருந்தது. இந்தியா தரப்பில் பயணிகள் விமானம் எதுவும் தாக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்பின்றியே பதிலடி கொடுத்தோம். தீவிரவாத முகாம்களில் துல்லியமாகக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினோம்” என தெரிவித்தார்.

ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய்,

“பயங்கரவாதத்தைத் திட்டமிட்டவர்களையும், குற்றவாளிகளை தண்டிப்பதற்கும், அவர்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதற்கும் தெளிவான இராணுவ நோக்கத்துடன் ஆபரேஷன் சிந்தூர் கையிலெடுக்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ரவூப் மற்றும் முதாசிர் அகமது போன்ற முக்கிய தீவிரவாதிகள் அடங்குவர். இவர்கள் IC814 விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள்” என தெரிவித்தார்.

கடற்படை அதிகாரி என்.ஏ பிரமோத், “அரபிக் கடலில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. கடற்படையும், விமானப்படையும் இணைந்து கண்காணிப்பை மேற்கொண்டோம். போர் நிறுத்தம் அமலிலிருந்தாலும் கடற்படை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த மோதலில் 5 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், இதற்குமேல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தீவிரமாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top