திடீர் வலிப்பு – அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையில் ஞானசேகரன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும் அவர்மீது கடத்தல், திருட்டு என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் ஞானசேகர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதும், பல பெண்களின் வீடியோக்கள் அவர் தொலைபேசியில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ஞானசேகனின் கைப்பேசியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விடியோக்கள், புகைப்படங்களில் இருக்கும் பெண்களின் விவரங்களும், அதில் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஞானசேகரன் அளிக்கும் பதில்கள் அனைத்தும், எழுத்து பூர்வமாகவும் விடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இவ்வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 2வது நாள் விசாரணையின் போது போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஞானசேகரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.