தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

ஆன்மிக மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என வெளிப்படையாக விதிகளை மீறி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

 

மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என வெளிப்படையாக விதிகளை மீறி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. முன்னதாக, மதுரை ரிங்ரோடு திடலில் கடந்த 16ம் தேதியன்று முருகனின் அறுபடை வீடுகளின் தரிசனத்திற்கான காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு, தினமும் பலர் தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாகக் கொண்ட மாநாட்டு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த மாநாட்டிற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பல்லாயிரம் பேர் இணைந்து ‘கந்த சஷ்டி கவசம்’ பாடினர்.

மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தீபம் ஏற்ற வேண்டும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூரை நடத்திய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, திருப்பரங்குன்றம் மலை போல குன்றம் குமரனுக்கே என்பதாக அனைத்து மலைகளும் காக்கப்பட வேண்டும், கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும், வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் இந்து வாக்குகள் ஒன்றாக இருக்க வேண்டும்; இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டுப் போடக்கூடாது, மாதம்தோறும் எல்லோர் வீட்டிலும் கோயிலிலும் சஷ்டி நாளில் கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐகோர்ட் கிளையில் மாநாட்டில் அரசியல் பேச மாட்டோம் என்று உறுதி தந்திருந்த நிலையில் விதிகளை மீறி வெளிப்படையாக திருப்பரங்குன்றம் மலை பிரச்னை துவங்கி பலதரப்பட்ட அரசியல் விஷயங்கள் பலராலும் பேசப்பட்டன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கடும் போக்குவரத்து நெரிசல்: மாநாட்டிற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில் 2 துணை கமிஷனர்கள், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநாட்டுக்கு வந்தவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உணவு கிடைக்காமல் திண்டாடிய மக்கள்: குடையான நாற்காலி
நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால், மாநாட்டுக்கு வந்தவர்கள் உரிய கூரை வசதியின்றி நிழல் தேடி அலைந்தனர். பலர், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப, நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கி, குடை போல பிடித்துக் கொண்டனர். மேலும் மதிய உணவு கிடைக்காமல் தவித்தனர். சாலைகளின் இருபுறம் கொடிக்கம்பங்களால் வாகனம் செல்வதில் பெரும் சிரமமிருந்தது. கொடி கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்ததும் பாதிப்பைத் தந்தது.

ஒரே விமானத்தில் வந்த அண்ணாமலை, சீமான் நித்யானந்தா சீடர்களும் பங்கேற்பு
முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையும், தனது கட்சி நிகழ்ச்சிக்காக சீமானும் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மதுரை வந்திறங்கினர். அண்ணாமலை, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தனி விமானத்தில் வர இருந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை வரவேற்க விமான நிலைய காத்திருப்பு அறைக்கு சென்றார். வெளியில் வந்த சீமானிடம், அங்கு காத்திருந்த நித்யானந்தாவின் சீடர்கள், ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா ஹிஸ்ட்ரி’ என்ற நித்யானந்தாவின் படத்துடன் கூடிய பெரிய புத்தகத்தை வழங்கி, தங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது அவர்களிடம் சீமான், ‘நித்யானந்தா நல்லா இருக்காரா?’ என்று விசாரித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top