ரஷித் கானின் அபார பந்துவீச்சால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் அணி வென்று அசத்தியுள்ளது. ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 25 ரன்கள் எடுத்தார்
. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கிரைக் எர்வின் 75 ரன்களும், சிக்கந்தர் ராஸா 61 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தானைக் காட்டிலும் 86 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 86 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி ரஹ்மத் ஷா மற்றும் இஸ்மத் ஆலம் இருவரின் சதங்களால் மீண்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 363 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஹ்மத் ஷா 139 ரன்களும், இஸ்மத் ஆலம் 101 ரன்களும் எடுத்தனர்.
தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் கிரைக் எர்வின் 53 ரன்களுடனும், ரிச்சர்ட் நிகராவா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஜிம்பாப்வே அணி வெற்றி பெற 73 ரன்களும், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 2 விக்கெட்டுகளும் தேவைப்பட்டன.
கடைசி நாள் ஆட்டத்தில் வெறும் 15 பந்துகளில் ஜிம்பாப்வே அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஸியா உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில்ல் கைப்பற்றியது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான் ஆட்ட நாயகனாகவும், ரஹ்மத் ஷா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.