நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், சமூகவலைத்தளங்களில் அரசியல் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர். அண்மையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் மணிப்பூர் விவகாரம், குஜராத் கலவரம் உள்ளிட்ட முக்கிய கேள்விகளை முன்வைத்து தன்னைச் சுற்றிய அரசியல் விவாதங்களில் ஈடுபட்டார்.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 19 அன்று, திவ்யா சத்யராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இது அவருடைய அரசியல் பயணத்துக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
திவ்யாவின் இந்த அரசியல் திருப்பத்துக்கு நடிகர் சத்யராஜ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து வீடியோவில்,
“என் அன்பு மகள் திவ்யா, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மற்றும் மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் சமூகநீதி கோட்பாட்டில் நிலைத்தடமாய் நிற்க வாழ்த்துகிறேன்”
என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.