அதிமுகவுடன் கூட்டணி வைக்க மறுத்தால், கொடநாடு கொலை வழக்கில் சிறையில் அடைக்க மிரட்டினார் பிரதமர் மோடி – எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், ஏ.கே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.சண்முகநாதன், “தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வந்தாலும் அதிமுக-திமுகவிற்கே போட்டி இருக்கும். மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். எல்லா கட்சிகளும் இந்த இரண்டு கட்சிகளோடு தான் கூட்டணிக்கு வரும். எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வேறு யாரிடம் கட்சித் தலைமை சென்றிருந்தால், கட்சி திமுகவிடம் அடகு வைக்கப்பட்டிருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்தால், கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட பல ஊழல் வழக்குகளில் சிறையில் அடைத்துவிடுவதாக எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி மிரட்டினார். சிறுபான்மையினரின் நலனுக்காக பாஜக கூட்டணியை அதிமுக புறக்கணித்தது. ஆனால் திமுக, பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை காப்பாற்றி வருகிறது” எனக் குற்றம் சாட்டினார்.