மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். இதில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி உத்தரவிட்ட உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சில நாட்களுக்கு முன்பு ஹெலிகாப்டரில் சென்று மகா கும்பமேளா நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வில் இதுவரை 10கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (ஜன.29) தை அம்மாவாசை என்பதால் பிரயாக்ராஜில் அமிர்த ஸ்நானம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்த தற்போதைய நிலைமையை கேட்டறிந்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *