தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

December 13, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

December 13, 2025

தமிழ் செய்தி இணையதளம்

“மத்திய பட்ஜெட் மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை” – இபிஎஸ் விமர்சனம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025-2026 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஒருமுறை கூட சொல்லவில்லை என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு – செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது.

தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது.

இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால், இது ஒரு மாயாஜால அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது. பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top