தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 27, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 27, 2025

தமிழ் செய்தி இணையதளம்

200 தொகுதிகளில் நிச்சய வெற்றி; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

200 தொகுதிகளில் நிச்சய வெற்றி; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு, கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்

கடந்த 5, 6ம் தேதிகளில், கோவைக்கு சென்று கள ஆய்வை துவக்கினேன். மற்ற மாவட்டங்களிலும் தொடர இருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை மாவட்டங்களில் நிறைவு செய்ததும், கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்வேன். மேற்கு மண்டல தி.மு.க.,வில் ஓட்டை விழுந்து விட்டது போல், அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு மாறாக, கொள்கை உரமிக்க மூத்த நிர்வாகிகளையும், லட்சிய நோக்கத்துடன் செயல்படும் இளைய பட்டாளத்தையும் கொண்ட தி.மு.க.,வின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது

வளர்ச்சி கட்டமைப்பு

இதை கோவையில் தரை இறங்கியதுமே உணர முடிந்தது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து, கள ஆய்வின் முதல் நிகழ்வான, ‘எல்காட்’ தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறக்க சென்றேன். வழியில் 6 கி.மீ., துாரம், சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம். மக்கள் புன்னகைத்து, கையசைத்து, ‘அடுத்ததும் உங்க ஆட்சிதான்’ என, வாழ்த்தி மகிழ்ந்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், காலத்திற்கேற்ற வளர்ச்சி கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். கோவை மாவட்ட நிர்வாகிகளிடம், புது உத்வேகம் உருவாகி இருப்பதை உணர முடிந்தது.

200 தொகுதிகள்

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்த இலக்கை அடைய, கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருக்கின்றன. மக்கள் பணியை லட்சியமாக கொண்டிருப்பதால், மறுபடியும் தி.மு.க., ஆட்சி அமையும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை, உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, வரும் 9, 10ம் தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறேன்.கோவையில் துவக்கினேன்; தமிழகம் முழுதும் தொடர்ந்து வருவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top