தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 23, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 23, 2025

தமிழ் செய்தி இணையதளம்

The Dictator படத்தின் ஹீரோவுக்கும் முதலமைச்சருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை~இபிஎஸ்!

The Dictator படத்தின் ஹீரோவுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ தொடர் கொலைகள், சாதிய மோதல்கள்! நான்காண்டு திமுக ஆட்சி, சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி.

திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வந்த சில செய்திகள்:

-தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை.

-திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு.

-வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை

-கரூர் மாவட்டம் குளித்தலையில் கோயில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை.

-புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு.

நாளையோடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திமுக ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி. ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கு, கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம்.

ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார் பாருங்களேன்…! “The Dictator” எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை! “எனது ஆட்சியில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடக்கவில்லை” என்று சட்டப்பேரவையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது.

“ஆக, குற்றவாளிகள் கைது” என்று சொல்வீர்களே அதையாவது செய்து, சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் . எனதருமை தமிழ்நாட்டு மக்களே- இனியும் இந்த திமுக அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை.  இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள். 2026-ல் #ByeByeStalin என்று சொல்லப்போகும் உங்களின் தீர்ப்பு மூலம் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்! தமிழ்நாடு உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top