தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 23, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 23, 2025

தமிழ் செய்தி இணையதளம்

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டுடுத்தி வைகைஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார்.

மதுரை வந்த கள்ளழகர் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி, தங்க பல்லக்கில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து இன்று நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும், அதன் பின்னர் ஆயிரம் பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.

இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோயிலில் இருந்து தங்கக்குதிரையில் எழுந்தருளி வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது, வெள்ளிக் குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகர், ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.

அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களில் மத்தியில், பச்சை பட்டுடுத்திய கள்ளழகர், வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கள்ளழகர் பச்சை பட்டூடுத்தி, ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

வைகை ஆற்றுக்குள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு அழைத்தார். பக்தர்கள் பூக்கள் தூவி கள்ளழகர் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள் மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார். முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி
அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் மதுரை வந்ததால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளம் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

வைகையாறு முழுவதும் வெள்ளம்போல பக்தர்களின் தலைகள் காட்சியளித்தது. கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர். வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர்,மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவசரகால மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top