திருவண்ணாமலை மண் சரிவு.. புதைந்த 7 பேரை மீட்பதில் மிகப்பெரிய சவாலே இதுதான். திணறும் மீட்புப் படை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவு காரணமாக வீடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், அதனுள் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எந்த வகையில் மீட்பு பணிகளை மேற்கொண்டாலும் சிக்கல் என்பதால் பேரிடர் மீட்புப் படையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய வகை பொக்லைன் வாகனம் கூட செல்ல முடியாத குறுகிய சந்துப் பகுதியாக இருப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைச் (தீபமலை) சுற்றி 40 ஆண்டுகளுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
திருவண்ணாமலை வ.உ.சி நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 4.45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய சத்தத்துடன் பாறை ஒன்று சரிந்த நிலையில், மண் சரிந்து 3 வீடுகள் மூடப்பட்டன. அதில் 1 வீடு முழுமையாக மூடப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு, அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின் மீது மண் சரிந்து காணப்பட்டது.
அவர்களின் நிலை என்ன?
ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாக நீடிக்கிறது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை 4.45 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன. மண் சரிவில் வீடு மண்ணுக்குள் புதைந்து, சுமார் 18 மணி நேரம் கடந்துள்ள நிலையில், மண்சரிவில் சிக்கியவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மரங்கள், மரக்கிளைகள் ஆகியவற்றை வெட்டி அப்புறப்படுத்தியுள்ள பேரிடர் மீட்புக் குழுவினர், வீட்டை மூடியுள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.