தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா?

அரியலூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேருந்து கட்டண உயர்வு என்பது கிடையாது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பேருந்து கட்டண உயர்வு என்ற தகவல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதையொட்டி சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுடைய பேருந்துகளில் கட்டண உயர்வை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி சென்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மக்கள் கருத்துக்களை கேட்டு அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அந்த வகையில் தான் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பெற்றது. எனவே இது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைப்பெற்ற கூட்டம். தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் இல்லை.

தமிழ்நாடு அரசை பொருத்தவரை பேருந்து கட்டண உயர்வு என்பது இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம். பொதுமக்கள் மீது கட்டண உயர்வு சுமையை ஏற்றக்கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது கூட, நாம் தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. இப்போது சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்தாலும் இந்தியாவில் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. இருந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைப்படி அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு ஏதுமின்றி பேருந்துகள் இயங்கும்.

ஏற்கனவே எதிர்க்கட்சியினர் மின்சார கட்டண உயரப்போகிறது என தொடர்ச்சியாக பேசி வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்ற திட்டவட்டமாக அறிவிப்பை வெளியிட்டார்கள். அதேப்போல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் கட்டண உயர்வு என்பது
இருக்காது என்பதை முதலமைச்சர் அறிவுறுத்தல்படி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top