கன்னியாகுமரி: போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 1000 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் திடீரென அமெரிக்கா இந்த மோதலில் உள்ளே வந்தது. ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா திடீரென தாக்குதலை நடத்தியது.
இது அந்த பிராந்தியத்தில் நிலவிய பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய தூதரகம் ஆபரேஷன் சிந்து மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் நேற்று நள்ளிரவு பத்திரமாக தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். இதுவரை சுமார் 1,117 இந்தியர்கள் இந்தியா வந்துள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 1000 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர். இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் குமரி மீனவர்கள் பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள். ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை ஒன்றிய அரசு மீட்டு வருகிற நிலையில், ஆபரேஷன் சிந்து மூலம் குமரி மீனவர்களையும் மீட்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.