உலகின் பல பகுதிகளில் திரைப்பட விழாக்களை முடித்துவிட்டு வெள்ளித்திரைக்கு பறந்து வந்திருக்கிறது இயக்குநர் ராமின் ” பறந்து போ ” திரைப்படம். நகரத்தின் சிக்கலான கட்டடங்கள், சின்ன சின்ன ஏரிகள், குறைவான மரங்கள் என்கிற பருந்து காட்சியிலிருந்து திரைப்படம் தொடங்குகிறது. படத்தில் ‘கோகுல், குளோரி, ஜென்னா இவங்க மூன்று பேரையும் இணைக்கிறது நம்ம அன்புதான்’ அப்படிங்கிற வடசென்னை திரைப்படத்தின் வசனம் போல அன்பு எனும் மிதுல் ரயான் தனது சுட்டித் தனமான மற்றும் சோர்ந்து போகாத ஒரு மழலையாக பறந்து கொண்டே இருக்கிறார்
நகரம், காஸ்ட்லியான கல்வி, போட்டி உலகம், கடன், இஎம்ஐ இவற்றிலிருந்து சாதிக்க துடிக்கிற மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் கோகுல் – குளோரி . தனது எண்ணெய் தொழிலை முன்னேற்ற வேண்டும் எனவும், தனது சேலைக் கடையை சிறப்பாக நடத்தி அதன் மூலம் தானும் குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் எனவும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் அப்பாவும் – அம்மாவும். இந்த இரண்டு பேரின் ஓட்டத்தில் மகன் அன்பு அடைபட்ட வீட்டுக்குள் வீடியோ கேம், ஆங்கில படங்கள், பீட்சா, BTS பாடல்கள் என தனிமையில் கழிக்கிறான்.அன்புக்காகவே ஒரு நாள் வாய்க்கிறது. இந்த நவீன சிறைக்கூடத்தை விட்டு பறந்து போக வேண்டும் என அன்பு ஆசைப்பட்டது கை கூடுகிறது. அந்த Road Trip வேறொரு பிரச்னையை கொண்டு வர அங்கிருந்து தொடர்ச்சியாக அன்பு செய்யும் அட்ராசிட்டி தான் ” பறந்து போ” திரைப்படத்தின் ஒன்லைனர்.
அகில உலக சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்துடன் தமிழ் சினிமாவின் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர்களையும் வைத்திருப்பவர் நடிகர் சிவா. ஒரு கட்டத்தில் நடிகர் சிவா திரையில் தோன்றினாலே சிரிப்பு வந்துவிடும் என்கிற நிலை உள்ளது. ஆனால் சிவாவின் வேறோரு நடிப்பின் கோணத்தை இயக்குநர் ராம் இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். மகனை அடித்து விட்டு வருந்தி அவனுக்காக நூடுல்ஸ் செய்து தருவதும், அன்பு திடீரென அழும்போது அவனுக்கு சேமியா ஐஸ் வாங்கித் தந்து தேற்றுவதிலும் ஒரு தேர்ந்த எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவா.
தமிழ் சமூகத்தில் தாயுக்கும் மகனுக்குமான இணைப்பு என்பது இயல்பான ஒன்று. அன்பை முழுவதுமாக புரிந்து கொள்ளும் அம்மாவாக தனது நடிப்பையும், உணர்வுகளையும் படம் முழுக்க காட்டியிருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. மகனின் தூரம், குடும்பத்தின் பொறுப்பு, தனது சகோதரி மற்றும் குடும்பத்தை மிஸ் பண்ணும் காட்சி, கிளைமாக்ஸில் வரும் காமெடி ரகளை என மிக கச்சிதமாக நடித்திருக்கிறார் கிரேஸ். அன்பாக வரும் மிதுல் ரயான் தனது சுட்டித் தனங்களால் யார்ரா அந்த பையன்…? நான் அந்த பையன் எனும் ரேஞ்சுக்கு பட முழுக்க ஒரு பட்டாம்பூச்சிக்கு நிகராய் பறந்து கொண்டே இருக்கிறான். குளோரி – அன்புவின் பிணைப்பு திரையில் ஒரு ஃபீல் குட்டை தருகிறது.
மொத்தத்தில் ராமின் பறந்து போ.. குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பறந்து போகும் ஒரு விமான பயணத்தின் குதூகலத்தை தரும்.