
மதுரை: ரூ.350 கோடி செலவில் வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில், சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி திறந்து வைத்தார்.
மதுரை சுற்றுச் சாலையில் சிந்தாமணி அருகே அமைந்துள்ளது வேலம்மாள் மருத்துவமனை. இதன் வளாகத்தில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் ரூ.350 கோடி செலவில், சுமார் 12.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் துபாய் நாடுகளை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த கிரிக்கெட் மைதானம் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்தது.
தோனிக்கு உற்சாக வரவேற்பு
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று (அக்.9) திறந்து வைத்தார். இதற்காக, பிற்பகல் 2 மணியளவில் தனி விமானம் மூலம் அவர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, மதுரை விமான நிலையம் வந்த எம்.எஸ்.தோனிக்கு ஏராளமான இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, அவருக்கு வேலம்மாள் மருத்துவமனையில் வடக்கு பகுதியில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்.எஸ்.தோனி திறந்து வைத்தார். பிறகு, தோனி பேட் பிடித்து மைதானத்தில் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடியது அங்கிருந்த நபர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பாதுகாப்பு கருதி, இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர். தோனியின் வருகை, மாணவர்களிடையே கிரிக்கெட் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டும் எனவும், இந்த பிரம்மாண்ட மைதானம், எதிர்கால கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால கிரிக்கெட்டர்கள் கனவு தளம்
வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.வி.எம்.முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தோனி, “இப்படிப்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்ட கிரிக்கெட் மைதானம், எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவு தளமாக விளங்கப் போகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எம்.வி.எம்.முத்துராமலிங்கம், “இந்த மைதானம் தோனி போன்ற உலக கிரிக்கெட் ஜாம்பவான் திறந்து வைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. திறமைக்கு தளம் அமைத்துத் தரும் எங்கள் நோக்கை இது இன்னும் உயர்த்துகிறது. “Making Champions” என்ற நோக்கத்தில் செயல்படும் எங்கள் நிறுவனம், இன்று விளையாட்டு உலகிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது“ என்றார்.