
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கலைச்செல்வி. இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது 19 வயதான மகள் சீதாலட்சுமி. இவர் திருச்சி அரசு மருத்துவமனை விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மூக்கில் சதை வளர்ந்ததாக கூறி திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் சக மாணவிகள், மருத்துவரின் தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். அத்துடன், மாணவியின் பெற்றோர் மற்றும் சக செவிலியர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுட்ட செவிலியர் மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, செவிலிய மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் செவிலிய மாணவிகளிடம் உறுதி அளித்துள்ளார்.