திருமணமாகாத ஜோடிகள் இனி ஹோட்டல்களில் அறை எடுத்து தங்க அனுமதியில்லை என OYO நிறுவனம் அறிவித்துள்ளது.
திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி OYO ஹோட்டலில் அனுமதி இல்லை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயல்முறை உத்தரப்பிரதேசம் மீரட்டில் இருந்து இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹோட்டலில் அறை எடுக்க வருபவர்கள் திருமணம் ஆனதற்கான சான்றுகளை காண்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திருமணமாகாதவர்கள் பலரும் ‘OYO’ ஹோட்டலைத் தவறாகப் பயன்படுத்துவதால், குடும்பத்தினர் ‘OYO’ வில் தங்குவதைத் தவிர்க்கின்றனர். இதனால் மீரட்டில் இருக்கும் பலர், ‘திருமணமாகாதவர்களை ‘OYO’வில் அனுமதிக்கக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் ‘OYO’ வை புறக்கணிப்போம்’ என்று ‘OYO’ நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் மக்கள் அமைப்புகள், குழுவினர் பல புகார்களை இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றனர்.
மக்களின் தொடர் புகாரையடுத்து ‘OYO’ நிறுவனம் மீரட்டில் இருக்கும் தங்களின் ஹோட்டலில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை என்ற புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. இந்த கொள்கையை உடனே அமல்படுத்தவும் நகரத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு இந்தியா முழுவதும் இருக்கும் பிற மாநிலங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.